புனித தோமா திருத்தூதர் (ஜூலை 03)

புனித தோமா திருத்தூதர் 
(ஜூலை 03)




திருப்பலி முன்னுரை

    இந்தியாவின் திருத்தூதரான திருத்தூதர் தோமாவின் பெருவிழாவை இன்று இந்திய கத்தோலிக்கத் திரு அவை அக்களிப்புடன் கொண்டாடி மகிழ்கிறது. 1950 ஆண்டுகளுக்கு முன்பு, கிமு 52-ல், இந்தியாவில், குறிப்பாக தென் இந்தியாவில் கால்பதித்து, இன்றைய தமிழகம் மற்றும் கேரளாவின் இயேசுவைப் பறைசாற்றி, அவர்தம் விசுவாச அறிக்கையான "என் ஆண்டவரே! என் தேவனே!" என்ற அடிச்சுவட்டில் உயிர்ப்புக்குச் சான்று, நற்செய்தி அறிவித்து, இறுதியில் சென்னையிலுள்ள புனித தோமையார் மலையில் மறைச்சாட்சியாக 1972-ல் தமது இன்னுயிரையும் ஈந்து சான்று பகர்ந்தவர் திருத்தூதர் புனித தோமையார். இதோ. என் கைகள் என்று சொன்ன ஆண்டவரின் காயங்களில் தன் விரல்களைப் பதிந்து. அவர்தம் உயிர்ப்பிற்குச் சான்று பகர்ந்த அவர், "நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்" என்று ஒற்றை வரியில் தன் விசுவாசத்தை அறிக்கையாக வெளியிடுகின்றார். 

    தொடக்கத் திரு அவையில் புனித தோமாவின் உயிர்ப்பு அனுபவமே மிகப்பெரிய மூலதனமாகவும் மூல ஆதாரமாகவும் அமைந்தது. நாமும் செல்வோம். அவரோடு இறப்போம் (யோவா 11: 16 என்று புனித தோமா துணிச்சல் மிக்க திருத்தூதராக மிகுந்த பேரன்போடு விளங்குகிறார். இயேசுவின் மீதான இவர்தம் அன்பும் அக்கறையும் கீழை நாடுகளின் மாபெரும் திருத்தூதராக விளங்க களம் அமைத்தது. இயேசுவின் காயங்களில் பதிந்த விரல்கள் இந்தியாவில் நற்செய்தியை விதைத்தது. அன்னை மரியாவின் மீதான இவர்தம் அன்பு, தொடக்கத் திரு அவையில் மரியன்னைமீதான பக்தி வளர பேருதவி செய்தது. திருத்தூதர் தோமா கொண்டு வந்ததாக நம்பப்படுகின்ற, புனித லூக்கா வரைந்த அன்னை மரியின் அழியாத ஓவியம் இன்றும் அதற்குச் சான்று. நாமும் இத்திருப்பலியில் சிறப்பாகப் பங்கேற்று புனித தோமையாரின் வழியாக உலகத் திரு அவையும் நம் விசுவசத்தையும் புதுப்பித்து கூட்டியக்கத் திரு அவையாக பயணிப்போம்.


முதல் வாசக முன்னுரை: எசாயா 52: 7-10

    இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா, "நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, 'உன் கடவுள் அரசாளுகின்றார்' என்று கூறவும் வருவோரின் பாதங்கள் மலைமேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!" என உரைக்கின்றார். மெசியா வருகையை முன்னுரைக்கும் பாடமாக இருக்கும் இந்த இறைவாக்கு, நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் தருகின்றது. இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை: எபேசியர் 2: 19-22

    இன்றைய இரண்டாம் வாசகத்தில், கட்டடம் என்னும் உருவகத்தைப் பயன்படுத்தி, திரு அவையின் ஒழுங்கு மற்றும் ஒருங்குநிலையை எபேசு நகர மக்களுக்கு எடுத்துரைக்கின்றார் பவுல் திருத்தூதர்கள் இக்கட்டடத்தின் அடித்தளமாக இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் எடுத்துரைத்த நற்செய்தியின் வழியாகவே நம்பிக்கையாளர்கள் கிறிஸ்துவோடு இணைகிறார்கள் என்று விவரிக்கும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.


நம்பிக்கையாளர்களின் மன்றாட்டு

1. எல்லாம் வல்ல அன்பு இறைவா, நீர் இந்த உலகில் ஏற்படுத்தியிருக்கும் உமது திருஅவையை வழிநடத்தும் எமது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் யாவரும் 'இயேசுவோடு செல்வோம், இயேசுவோடு மரிப்போம்" என்று முழங்கிய தோமாவைப்போல இயேசுவோடு உடனிருப்பவர்களாகவும் பணி வாழ்வில் உண்மையுள்ளவர்களாகவும் வாழ வரமருள உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்பு இறைவா, எமது இந்திய திருநாட்டை ஆளுகை செய்துவரும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், மக்களின் பிரதிநிதிகள் யாவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டப் பணியைச் சுயநலமில்லாத பொதுநல மனப்பான்மையோடு ஆற்றிடவும் நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திடவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. நம்பிக்கையின் துவக்கமும் முடிவுமானவரே, புனித தோமாவைப் போல இயேசுவின்மீது உண்மையான அன்புள்ளவர்களாகவும், வாருங்கள் அவரோடு இறப்போம் என்று முழங்கிய அவரைப்போல துணிவுமிக்கவர்களாகவும் நற்செய்திக்காகச் சான்று பகர்ந்து வாழ்ந்திட வரமருள உம்மை மன்றாடுகிறோம்.

4. கண்டதால் நம்பினாய் காணாமலே நம்புவோர் பேறுபேற்றோர் என்றவரே, துவக்கத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் விளைவால் உம்மை அறிந்து பின்பு உம்மிடம் கொண்ட நம்பிக்கைக்காக இந்தியாவிற்கு வந்து நற்செய்திக்காக தமது உயிரையும் தந்து இரத்த சாட்சியாக மரித்த புனித தோமாவைப்போல நாங்களும் உம்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் உறுதி பெற்றவர்களாய் நற்செய்திக்கென்று சாட்சிய வாழ்வு வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. என்றென்றும் இரக்கம் காட்டும் இறைவா! இத்திருஅவையிலுள்ள அனைவரும் புனித தோமாவைப் போல் ஐயம் நீங்கித் தெளிவுப் பெற்று நம்பிக்கைப் பெற்றவும், துணிவுடன் இறையரசை அறிவிக்கவும் தேவையான வலிமைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொதுக்காலம் 14ஆம் வாரம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு)