பொதுக்காலம் 14ஆம் வாரம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு)
பொதுக்காலம் 14ஆம் வாரம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு
திருப்பலி முன்னுரை
இறைஇயேசுவில் அன்பிற்குரியவர்களே, இன்று பொதுக்காலம் 14ம் ஞாயிறு வழிபாட்டைச் சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.
என் இறைவா! என் இதயம் உம்மில் அன்றி வேறு யாரிடம் அமைதி பெறும் என்கிறார் புனித அகுஸ்தினார். 'நிறை அன்பை அளிக்கும் தாயினும் மேலாக நான் உங்களைத் தேற்றுவேன்' என்ற இறைவார்த்தையையும் ஆறுபோல் நிறைவாழ்வு பெருக்கெடுக்கும் என்ற இறையன்பை ஆழமாக உணர்ந்தவர் புனித தோமா.
அறிவில் வளம்பெற, உறவு உரம்பெற, ஆன்மீகம் ஆழம் காண கேள்விகள் அவசியமானது, உறுதி செய்ய வழிகோலுகின்றது.
இன்றைய அருள்வாக்கு வழிபாடு அமைதியைப் பற்றிப் பேசுகின்றது. அமைதி என்பது கடவுளின் கொடை. எந்த வீட்டிற்குச் சென்றாலும் அங்கு அமைதி உண்டாகுக என்று வாழ்த்த பணிக்கிறார் இயேசு. 'கிறிஸ்துவை நம்பும் ஒவ்வொருவருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக' என்கிறார் புனித பவுல். சீடர்களாக வாழ்வது ஆண்டவரின் மேல் கொண்ட அன்பை அதிகப்படுத்தும். அளவில்லாத அன்பும் இறைப்பராமரிப்பின்மீது நம்பிக்கையும் கொண்டு வாழ நம்மைத் தூண்டும். இறைவனைப் பின்பற்றும்போது நமக்கு நூறு மடங்கு ஆசீர்வாதமும் அதே சமயம் துன்பமும் சவால்களும் இருக்கும் என்பதை உணர்ந்தவர்களாய் இப்பலியில் இணைவோம். இயேசுவின் உண்மையான சீடர்களாக வாழ முயற்சிப்போம்.
முதல் வாசக முன்னுரை(எசாயா 66: 10-14c)
தாய் தன் பிள்ளையை தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன்; உங்கள் இதயம் மகிழ்ச்சி அடையும் என்று ஆறுதல் தரும் செய்தியை மக்களுக்கு அறிவிக்கிறார் இறைவாக்கினர் எசாயா. ஆண்டவர் மக்களினங்களுக்கு அளிக்கும் தீர்ப்பு பற்றி கூறும் இவ்வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை(கலாத்தியர் 6: 14-18)
இயேசுவின் சிலுவையே அன்றி வேறெதிலும் பெருமை பாராட்டமாட்டேன் என்கிறார் புனித பவுல். சிலுவை மீட்பின் சின்னம்; நம்பிக்கையின் சின்னம். இந்த சிலுவையால் மீட்பு அடைவோம், வாழ்வு பெறுவோம் என்ற நம்பிக்கையில் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இறைமக்களின் மன்றாட்டுகள்
பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. நம்பிக்கை தருபவரே இறைவா.
உம் திருச்சபையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள், அருட்சகோதரர்கள் அனைவருக்கும் ஆவியானவரின் அருட்கொடைகளை வழங்கி, ஆதித்திருச்சபை ஆவியானவரால் செழித்தோங்கி வளர்ந்ததுபோல, இவர்களும் ஆவியானவரின் ஆற்றலால் மற்றும் உம் நற்கருணை பிரசன்னத்தால், திருச்சபையை சிறப்பாக வழிநடத்திடவும், இறைமகன் கற்றுக்கொடுத்த அறிவுரைகளை தம் வாழ்வில் என்றும் செயலாக்கி வாழ்ந்திடவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்பின் ஊற்றே இறைவா,
நாங்கள் உம் திருமகன் இயேசுவை புனித தோமாவைப்போல "நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்" என மனதார உணர்ந்து, எங்கள் விசுவாசத்தை அறிக்கையிடவும். அவரன்பை ஆழமாக உணர்ந்திடவும், துன்பத்தின் வழியாகவே மீட்பு, மகிமை, நிலைவாழ்வு என்பதை உணர்ந்தவர்களாக, நீர் கற்றுத்தரும் அனைத்தையும் முழுமையாகக் கடைப்பிடித்து, தூயஆவி அருளும் புதியதும், புனிதமானதுமான இயல்புகளை அணிந்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ஞானத்தின் ஊற்றே இறைவா,
எம் பங்கு மக்கள் அனைவரும் இறையன்பிலும், பிறரன்பிலும் வளரவும், குடும்பங்களில் நீர் தரும் அமைதி நிரந்தரமாகிடவும், பிள்ளைகள் நன்கு படித்திடவும், திருப்பலியில் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருந்து செல்லாது, பங்கின் வளர்ச்சிக்கு பங்குப்பணியாளர்கள் எல்லாவித முயற்சிகளிலும் எங்கள் பங்களிப்பை, ஒத்துழைப்பை நல்கி, உம் இறையரசைக் கட்டி எழுப்பிடும் பணியில் நாங்களும் சிறுதுளியாக கலந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. புதுவாழ்வு அளிப்பவரே இறைவா,
இந்த உலகில் பணம், பதவி, புகழ், சிற்றின்பம் இவற்றிலே மயங்கியவர்களாக, அதிலே இன்பம் காண்கின்றவர்களாக, எங்களை தொலைத்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனநிலையை மாற்றியருளும். இருளின் பாவச் செயல்களுக்கு எங்களை கையளிக்காமல், உம் அருள்வாழ்வில் நாட்டமில்லாமல் வாழும் மனதினை உம் புதுப்பிக்கும் ஆவியால் மாற்றி, ஒளியின் பாதையில் வாழ்ந்திட புதுப்படைப்பாகிட வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. கருணையும். இரக்கமும் நிறைந்த இறைவா,
இவ்வுலகில் அநாதைகள், கைமபெண்கள் மற்றும் உறவுகளிருந்தும் தனித்து விடப்பட்டோர், நோய்களின் வலியினால் துயருறுவோர், தேவையில் உழல்வோர், கவலைகள், வேதனைகளினால் கண்ணீரில் வாழ்வோர் அனைவரையும் உம்மிடம் ஒப்புக்கொடுக்கின்றோம். அவர்களை உம் பேரன்பாலும், இரக்கத்தினாலும் நிறைத்து, உம் ஆறுதலையும், பாதுகாப்பையும் கொடுத்து, அவர்கள் கண்ணீரை சந்தோசமாக மாற்றி, வாழ்வில் நம்பிக்கையுடன் பயணப்படக்கூடிய ஆற்றலைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Christ Media
கருத்துகள்