தூய மரியன்னையின் திரு இருதயம் (Immaculate Heart of Mary)

 தூய மரியன்னையின் 

திரு இருதயம்




திருப்பிலி முன்னுரை

    மரியாவின் மாசற்ற இதயத்தின்மீது அளவுகடந்த இறைப்பற்றும், அன்பும் கொண்ட இறைகுலமே, கருவிலே கறையொன்றில்லா கன்னி மரியாவின் பெருமையின் அடிப்படையில் தோன்றியதுதான் மரியாவின் மாசற்ற இதய பக்தி. பாத்திமாவில் மரியா தந்த காட்சியில், 'என் மாசற்ற இதயம் வெற்றி பெறும்" என்று முன்னறிவித்தார். எனவே, இது போராட்டத்தின் நேரமல்ல, மன்றாட்டின் நேரம். மரியன்னையின் மாசற்ற இதய பக்தியை என் இதய பக்திக்கு இணையாக வைக்க நான் விரும்புகிறேன்" என்று பாத்திமா செய்தியில் குழந்தை இயேசு வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார். லூசியாவிடம் மரியா பேசியதாவது, ''என் மகள் லூசியாவே, முட்களால் சூழப்பட்ட என் இதயத்தைப் பார். மீட்புக்குத் தேவையான அனைத்து அருளையும் பெற ஐந்து முதல் சனிக்கிழமைகளில் மறையுண்மைகளை தியானித்து முழு செபமாலையை என்னுடன் சேர்ந்து ஒப்புக்கொடுப்பாயா" என்று கேட்டிருக்கிறார். அந்த முட்களை ஒவ்வொன்றாக அகற்றி அக்காயத்தை நம் அன்பினால் ஆற்ற வேண்டும்.

    நம் ஒவ்வொரு நினைவும், சொல்லும், செயலும் அதற்கு ஏற்றதாய் அமையவேண்டும். பாத்திமாவில் இறையன்னை காட்சியளித்தபோது, 'நான் மட்டுமே உங்களுக்கு உதவமுடியும். செபியுங்கள், பிறருக்காக தியாகங்களை ஒப்புக்கொடுங்கள். முதல் சனிக்கிழமை பக்தியை அனுசரியுங்கள்" என்று வாக்களிக்கிறார். மாதாவின் இதயம் ''துயரம் நிறைந்த மரியாவின் மாசற்ற இதயம்" ஆகும். ''மாசற்ற" என்ற அடைமொழி இறைவனால் மாதாவுக்கு அளிக்கப்பட்டது. துயரம் நிறைந்த என்ற அடைமொழி நம்மீதுள்ள அன்பினால் அன்னையே பெற்றுக்கொண்டது. மூவொரு இறைவன் மரியன்னையையும், மரியா இறைவனையும் நேசிப்பதில், எந்தக் குறையும் இல்லாமல் அவர்கள் பேரின்ப வீட்டை அனுபவிக்கிறார்கள். ஆனால், நாம் அவர்களை நேசிப்பதில் பேரின்ப ஆனந்தம் இன்னும் முழுமைப்பெறவில்லை. நம்முடைய பாவங்களால் அது முழுமைப்பெறவில்லை. ஏனென்றால், நமது பாவங்கள் கடவுளை நோகச் செய்கின்றன. அன்னையை அன்பு செய்து அதற்கேற்ற தூய வாழ்வு வாழ்வோம், என வாக்களித்து, பக்தியுடன் இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.

விசுவாசிகளின் மன்றாட்டு

1. நல்லாயனே இறைவா, திருஅவையை இறையாட்சியின் வழியில்நடத்திச் செல்லும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார். பொதுநிலையினர்,  அனைவரும் மரியாவின் மாசற்ற இதய அன்பின் வழிக்கேற்ப அன்பிலும், நம்பிக்கையிலும் வாழ்ந்திடத் தேவையான வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆதியும் அந்தமுமான இறைவா, இயேசுவின் தாயான மரியாவுக்கு வணக்கம் செலுத்தும் முறையை எதிர்த்து மற்ற சபைகளுக்கு மாறிக் கொண்டிருக்கிற, கோடிக்கணக்கான கத்தோலிக்க மக்கள் உமது அளவில்லா இரக்கப் பெருக்கத்தால், விசுவாச உண்மையை உணர்ந்து வாழ வரமருள மரியாயின் மாசற்ற இதயத்தின் வழியாக இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

3. மகா பரிசுத்தமான இறைவா, உலகெங்குமுள்ள திவ்ய நற்கருணைப் பேழைகளில் இருக்கும் இயேசு கிறிஸ்துவின் விலைமதிக்கப்படாத திரு உடலையும், திரு இரத்தத்தையும், ஆத்துமத்தையும் தெய்வீகத்தையும் அவருக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத்திற்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்து, பாவிகளை மனந்திருப்பத் தேவையான வரமருள இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

4. அமைதியின் அண்ணலே இறைவா, சகோதரி லூசியா 1939 மார்ச் 19ல் எழுதிய ஒரு கடிதத்தில் 'உலகத்தில் யுத்தமா, அமைதியா என்பது. நாம் முதல் சனிக்கிழமைப் பக்தியை கடைப்பிடிப்பதில்தான் இருக்கிறது. நம்மையே நாம் மாசற்ற இருதயத்திடம் ஒப்படைக்கவும் வேண்டும். இதனாலேயே இப்பக்தி முயற்சி பரவ வேண்டுமென்று நான் மிகவும் ஆசிக்கிறேன்" என எழுதியுள்ள வார்த்தைகளை நம்பி சனிக்கிழமை பக்தியை கடைப்பிடிக்கத் தேவையான வரமருள மரியாயின் மாசற்ற இதயத்தின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. விடுதலையின் நாயகனே இறைவா, இன்றைய சூழ்நிலையில் மக்களால் மக்களை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், தொண்டர்கள் மனித நேய மாண்பினைப் பிரதிபலிப்பவர்களாக, நேர்மையான வழியில் உண்மையின் ஊழியர்களாக, தியாக வாழ்க்கை வாழ்ந்து மனித நேயப் பாதையில் மக்களை வழிநடத்திச் செல்ல அவர்களுக்குத் தேவையான அருளைப்பொழியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.


                                                                                                                        Christ Media

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொதுக்காலம் 14ஆம் வாரம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு)