இயேசுவின் திரு இருதயப் பெருவிழா (ஜூன்)
இயேசுவின் திரு இருதயப் பெருவிழா (ஜூன்)
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவின் தூய நெஞ்ச அன்பில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே, இன்று அனைத்துலக கத்தோலிக்க திருஅவை இயேசுவின் திருஇருதயத்தின் பெருவிழாவைக் கொண்டாட அழைக்கின்றது. இயேசுவின் திருஇதயம் ஆராதனைக்கும், வணக்கத்திற்கும், புகழ்ச்சிக்கும் உரிய ஒன்றாகும். கனிவும் இரக்கமும் கொண்ட இயேசுவின் இருதய அன்பிற்கு அளவேயில்லை. மூவொரு இறைவனின் கருணை இரக்கம் ஆகியவற்றின் சாயல் இது.
திருத்தந்தையர்கள் 9ம் பத்திநாதர், 13ம் சிங்கராயர் 11ம் பத்திநாதர் ஆகியோர் இப்பக்தி முயற்சியை மிகவும் ஊக்குவித்தனர். கி.பி. 1856ல் திருத்தந்தை 9ம் பத்திநாதர் இப்பக்தியை கத்தோலிக்கக் குடும்பங்கள், குழுக்கள், துறவற சபையினர் அனைவரும் இயேசுவின் திரு இதயத்திற்குத் தங்களை அர்ப்பணிக்க அறிவுறுத்தினார். கி.பி. 1899ல் திருத்தந்தை 13ம் சிங்கராயர் இயேசுவின் திரு இதயத்திற்குப் பரிகாரம் செய்வதன் அவசியத்தைக் குறித்து எழுதிய திருமடலின் வழியாய் முதல் வெள்ளிக்கிழமைப் பக்தி பரவலாயிற்று.
இயேசுவின் திருஇருதய பக்தி இவ்வுலக வாழ்வில் ஆசீர்பொழியும் ஊற்றாகவும், அபரிமிதமான அருட்கொடைகளைக் கொடுக்கக் கூடியதாகவும், மறுமையில் நிலையான வாழ்விற்கு தொடக்கமாகவும் இருப்பதால், இவ்வுலக தீய நாட்டங்களை விலக்கி அன்பு, பரிவு, இரக்கம், தாழ்ச்சி, கீழ்ப்படிதல், மன்னிப்பு போன்ற பண்புகளைக் கொண்டு வாழ்வோம் எனும் உறுதியுடன் இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டு
1. தொடக்கமும் முடிவுமான எம் இறைவா, திருஅவையின் தலைவர் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார். இறைப்பணியாளர்கள் அனைவரும் இயேசுவின் திரு இருதய இரக்கத்தின் பண்புகளால் இறைமக்களை வழிநடத்தி வாழ்வளிக்க வேண்டிய அருளைத் தந்தருள தூய நெஞ்சம் கொண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பை அள்ளித்தந்த இறைவா, உம்மை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் உமது அன்பை வார்த்தைகளால் மட்டுமின்றி செயல்களாலும் வெளிப்படுத்தி அன்பு நிறைந்த இதயங்களாக வாழ அனைத்து வரங்களையும் அளித்து காத்திட உம்மை மன்றாடுகிறோம்.
3. தியாகத்தின் திரு உருவே இறைவா, தனக்கு குறிக்கப்பட்ட பணியை நினைத்து மனதில் கலக்கம் கொண்டாலும் உமது பரிகார பலியின் செயல்திட்டத்தை நிறைவேற்றி உலக மக்களுக்கு இரட்சணியம் வழங்கிய திருமகனைப்போல் நாங்களும் தன்னலம் கொள்ளாமல் பிறருக்காக தியாகமேற்கும் நல்லுள்ளத்தை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. நீதியின் பாதையில் வழிநடத்தும் இறைவா, மக்களை நல்வழியில் வழிநடத்தவும், சிறந்த திட்டங்களினால் கல்வி, வேலை வாய்ப்பு அளிக்கவும், மக்களின் நலனே தம் வாழ்வென வாழவும் நல்மனம் கொண்ட நல்ல மனிதர்களை ஆட்சியாளர்களாக அளிக்க வேண்டுமென்று தூய நெஞ்சம் கொண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
5. குணமளிக்கும் இறைவா, ஆரவார ஆடம்பர வாழ்வே பெரிதென நினைத்து தெய்வ பயம் என்பதே அறியாமல் மனம் போனபடி வாழ்ந்துக் கொண்டிருக்கும் பேதை நெஞ்சங்களை உம் ஞான ஒளியால் திசை திருப்பி குணமளிக்க வேண்டுமென்று இயேசுவின் திருஇருதயமே எம்மில் இரங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
Christ Media
கருத்துகள்