திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா

 திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா
ஜூன் 24 


திருப்பலி முன்னுரை

    ஆண்டவரின் வழியைச் செம்மைப்படுத்துங்கள் என்று இறைவனின் வழிக்கு அழைக்கும் திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாட இஞ்ஞாயிறு திருப்பலிக்கு அழைக்கப்பட்டிருக்கும் அன்புள்ளங்களை வரவேற்கிறோம்.

    ஆண்டவரிடம் கொண்ட ஆழமான விசுவாசத்தையும் அதன் ஆசீர்வாதத்தையும் அனுபவித்து மகிழ்ந்தனர் செக்கரியாவும் எலிசபெத்தும். முதிர் வயதில் திருமுழுக்கு யோவானைப் பெற்றெடுக்கிறார்கள். அவரும் தனது பிறப்பின் நோக்கத்தை அறிந்து 'மனம் மாறி திருமுழுக்கு பெறுங்கள்' என்றும் எனக்குப் பின் ஒருவர் வருகிறார்; அவரின் மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை' என்றும் மிகவும் துணிவுடன் இயேசுவை முன்னறிவிக்கின்றார். அரசனின் தவறுகளைக் கூடச் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. நாமும் திருமுழுக்கு யோவான் போல இறை அழைப்பிற்கேற்ற பாதையில் பயணிப்போம். நமது வாழ்வினை வருத்தமடையச் செய்யும் செயல்களை, சவால்களை இறைத்துணையுடன் எதிர்கொள்வோம்.

    சாதிக்கத் துணிந்தவனிடத்தில் சவால்கள் சாத்தியமாகிவிடும்.

    சுமக்கத் தெரிந்தவனுக்கு சுமைகள் இலகுவாகிடும்.

    'உலகினை ஆளுங்கள்' என்று அனைத்துலகையும் ஆண்டு மகிழ தந்திருக்கும் இவ்வாழ்வை இறைவனுக்கு ஏற்ற வழியில் நடந்து, திருமுழுக்கு யோவானைப் போல இயேசுவுக்கு சாட்சிகளாக மாற வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. மனம் மாறுங்கள் என்று அழைத்தவரே!

எம் திருச்சபையை வழிநடத்த நீர் அழைத்த திருச்சபைப் பணியாளர்கள் மக்களை மனம்மாற அழைக்கும் வேளையில், அக்குரலுக்குச் செவிமடுத்து, இறைவழியில் நடக்கும் மனநிலையைத் தந்திடவும், திருச்சபைப் பணியாளர்களின் பணி சிறக்கவும் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

2. ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்ய திருமுழுக்கு யோவானைத் தந்தவரே!

நாங்களும் அவரைப் போல இறைவனை உள்ளத்தில் வரவேற்கவும். அவரது வழிகளில் துணிவுடன் நடந்து, பாவ வழியை விட்டு விலகவும் வேண்டும் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

3. முதிர்வயதில் செக்கரியாவையும் எலிசபெத்தையும் குழந்தைச் செல்வம் தந்து ஆசீர்வதித்தவரே!

பல ஆண்டுகளாய் குழந்தைக்காக ஏங்கி நிற்கும் மக்களை கண்கொண்டு பாரும். குழந்தைச் செல்வத்தை தந்து மகிழ்ச்சியால் நிரப்ப வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

4. புதுவாழ்வு தருபவரே!

எம் நாட்டை ஆளும் தலைவர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாப் போக்கைக் காண்கிறோம். நவீனம் என்ற பெயரில் இயற்கையை அழிக்காவண்ணம் மக்கள் முன்னேற்றத்தில் மட்டும் அக்கறை கொள்ள வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

5. நலம் பல தருபவரே எம் இறைவா!

எம் பகுதி வாழ் மக்களை ஆசீர்வதித்து, போதிய மழையைத் தக்க காலத்தில் தந்து விவசாயம் சிறக்கவும், குடும்ப அமைதி, மகிழ்ச்சி நிறையவும், கல்வி முன்னேற்றம், வேலைவாய்ப்பு. குழந்தை வரம் வேண்டுவோர் பெற்றுக் கொள்ளவும் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொதுக்காலம் 14ஆம் வாரம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு)