இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா, 22 June 2025
இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா
22 June 2025
திருப்பலி முன்னுரை
"அவர் பலியாகப் படைத்த இரத்தம், அவரது சொந்த இரத்தமே. இதனால் கிறிஸ்து, நமக்கு என்றுமுள்ள மீட்புக் கிடைக்கும்படி செய்தார்."
உலகம் உயிர்ப்புடன் இயங்க தன் உயிரைத் தானமாய் தந்து இயேசுவின் திருவுடல் திரு இரத்த பெருவிழாவை இன்று அன்னையாம் திரு அவை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றது.
உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் உணவுக்காக உழைத்துக் கொண்டிருக்க தனது உடலையே உணவாகத் தந்து தனது ரத்தத்தை உயிர் வாழ உதவும் பானமாகத் தந்த இயேசுவின் பேரன்பை நினைத்து இன்று அன்னையாம் திரு அவை விழா எடுக்கின்றது. ஆம், தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவைப் போல், நாமும் மக்களின் நல்வாழ்வுக்கு, ஏதோ ஒரு வகையில், நம்மையே வழங்கும் வழிகளைக் கற்றுக்கொள்ள, கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திருஇரத்தம் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது. நம்மை எவ்வாறு பிறருக்கு பகிர்ந்து கொடுப்பது ? நமது திறமைகளை, நமது உழைப்பை நமது நேரத்தை நமது பணத்தை நமது நல்ல மனதை பிறருக்கு தாராளமாய் தந்து உதவுவதன் மூலம் நம்மைப் பிறருக்கு பகிர்ந்து கொடுக்க முடியும்.
பகிர்தளிலும் இழப்பதிலும் கிடைக்கின்ற இன்பத்தைச் சுவைத்திட தம் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு நம்மை நேசித்த இயேசுவை நெருக்கமாய் நேசிப்போம். தன் உடலையும் உயிரையும் நமக்குக் கொடையாகத் தந்த இயேசுவின் வழியில் இரத்தத் தானம் உடல் உறுப்புத் தானம் போன்றவை செய்திட மனமுவந்து முன்வருவோம். கொடுப்பதில் இன்பம் பெறுவோம். இழப்பதில் நிறைவு காண்போம். அதற்கான அதற்கான அருளை இன்றைய திருப்பலியில் கொடையாகப் பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
இன்றைய முதல் வாசகத்தில் தொடக்கநூலின் பதிவாகிய ஆபிராம் கெதர்லகோமரையும் அவனுடன் இருந்தவர்களையும் வென்று வந்தற்கு நன்றி பலியாக உன்னதக் குருவும், இயேசுவின் முன்னோடியுமான மெல்கிசெதேக் அப்பத்தையும் இரசத்தையும் இறைவனுக்குக் காணிக்கையாக அர்ப்பணித்த நன்றிப்பலியைப் பற்றி வாசிக்க, அதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நற்கருணை நம்மைக் கிறிஸ்துவோடு மட்டுமல்ல, உறவின் அடிப்படையில் நம் அனைவரையும் இணைக்கிறது. அப்பம் ஒன்றே ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கின்றோம். எனென்றால் நாம் அனைவரும் ஒரே அப்பத்தில் தான் பங்கு பெறுகிறோம். இயேசுவின் திருவுடலும் திருஇரத்தமும் நம்மை இயேசுவோடு ஒன்றிணைக்கிறது. இக்கருத்துகளை எடுத்துரைக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
குரு: கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம். கிறிஸ்துவை உடலோடும், ஆன்மாவோடும் உண்டு பருக கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்காகவும் நன்றி கூறுவோம். எமது ஆன்மாவை அன்புசெய்யும் கிறிஸ்து தன்னை தமது மெய்யான உணவாகத் தருகின்றார். அவரிடம் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. "மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்கிற திருப்பாடல் வரிகளின்படி, எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தங்கள் பணிக்குருத்துவத்திலும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், எங்களது பொதுக்குருத்துவத்திலும், பிரமாணிக்கமாக இருக்கவும், கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் ஆகியவற்றின் உயிருள்ள சாட்சிகளாக விளங்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. "விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னதக் கடவுள்" ஆபிராமுக்கு ஆசி வழங்கியது போலவே, இவ்வுலகிற்கும், உலகாளும் தலைவர்களுக்கும். ஆசியும் ஞானமும் வழங்கும் அமைதியின் அரசராய் விளங்கவும், போர்கள், சண்டைகள், கலவரங்கள், பயங்கரவாதம், தீவிரவாதம்போன்ற தீங்குகள் யாவும் நீங்கப்பெற்ற நிம்மதியான சூழலை உருவாக்கித்தர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிற இவ்வேளையில் "நற்கருணை இல்லையேல், திருஅவை இல்லை; குருக்கள் இல்லையேல் நற்கருணை இல்லை" என்பதை உணர்ந்தவர்களாக, நாங்கள் அனைவரும் நற்கருணை, குருத்துவம் ஆகிய திருவருட்சாதனங்களின் மேன்மையைப் போற்றவும், தேவ அழைத்தலுக்காக ஜெபிக்கவும், தேவ அழைத்தலை எங்கள் குடும்பங்களிலே ஊக்குவிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், "அப்பத்தை உண்டு, கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம், ஆண்டவருடைய சாவை, அவர் வரும்வரை அறிவிக்கிறோம்" என்கிற நம்பிக்கையின் மறையுண்மையை, எங்கள் வாய்களால் மட்டுமல்லாமல், வாழ்க்கையாலும் அறிக்கையிடவும், ஒரே அப்பத்தை உண்டு. ஒரே கிண்ணத்திலிருந்து பருகுவதன் மூலம், ஒன்றிப்பின் சாட்சிகளாக விளங்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. நற்கருணையில் வீற்றிருக்கும் அன்பின் ஆண்டவரே! ஆயுதக் கலாசாரத்தால் வெற்றி நடைபோடும் பல நாடுகளில், அன்பை விதைக்கும் உணர்வுகளைக் கற்றுக்கொடும். பட்டினியால், பஞ்சத்தால் இறந்துகொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக உதவும் கரங்களைக் கற்றுக்கொடும். மனிதனை மனிதன் மதியாது. மான்பிழக்க வழிதேடும் பொய்க் கலாசாரத்தில், பண்பை, விழுமியங்களை விதைக்கக் கற்றுக்கொடும். இதனால் அவர்கள் என்றும் உம்மை பிரதிபலிக்க அருள்புரியவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
குரு: நற்கருணையின் ஆண்டவரே! இன்று நாம் பெருமகிழ்வோடு, நற்கருணையில் உமது உண்மைப் பிரசன்னத்தை போற்றிப் புகழ்கின்றோம். உம்மை உடலாகவும், இரத்தமாகவும் உண்னும் அரிய வாய்ப்பை எமக்கு தருவதையிட்டு பெருமைகொள்கின்றோம். நாம் உம்மை திருப்பலியில் பெற்று, உண்டு மகிழ எமக்குள் வாஞ்சையையும் ஆன்ம தாகத்தையும் தாரும். இறைவா, உண்மை உள்ளத்தோடு நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து தேவைகளையும் ஏற்று நிறைவுசெய்வீராக. உமது அன்பு பொங்கிவரும் ஆறாய் எம்மில் பாய்வதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
Christ Media
To Proclaim
கருத்துகள்